Wednesday, October 5, 2011

கத்தியின்றி ரத்தமின்றி...! விழுப்புண் பெற்ற வீரர்கள்:


கத்தியின்றி ரத்தமின்றி...!  விழுப்புண் பெற்ற வீரர்கள்:
இது 2 போட்டோகிராபர்களின் காமெடி. அதில் ஒருவர் இப்போது உயிருடன் இல்லை என்றாலும், எங்கள் மனதில் வாழ்ந்துக் கொண்டிருப்பவர். மற்றொருவர் வாரப்பத்திரிகையில் பணியாற்றுகிறார்.
இந்த 2 கதாபாத்திரத்தில் ஒருவர் பெயர் மேனன். மற்றொருவன் அந்தோணி. 2 பெயருமே கற்பனைதான். (உண்மை சொன்னா கொன்னுடுவான்)
போட்டோகிராபர் மேனனுக்கு நல்ல சம்பளத்தில் வாரப்பத்திரிகையில் வேலைக் கிடைத்தது.  கோனிக்கா கலர் லேப்பில் மேனனை, அந்தோணி பார்த்து விட்டான். “டேய்.. மாப்பு... ட்ரீட் எங்கடா? ஒரு டீயாவது வாங்கித் கொடுத்தியா.? பிசினாரிப்பய...! என்று லேப்பில் இருந்த இளம் பெண்கள் முன்பு மேனனை, அந்தோணி கேவலப்படுத்தினான்.
மேனனுக்கு தாங்க முடியாத அவமானம். வார்த்தையால் அவமானப்படுத்தியது போதாது என்று மேனன் தலையில் அடித்தும், அவன் கேமிரா பையை இழுத்தும் வம்பு  இழுத்தான் அந்தோணி.
இதையெல்லாம் பார்த்த லேப்பில் இருந்த பெண்கள் விழுந்து விழுந்து சிரித்தனர். அதில் ஒரு பெண் மீது மேனனுக்கு ஒரு கண் (காதல்) இருந்தது.  அந்தோணியின் அட்டகாசத்தால், அந்த பெண்ணும் விழுந்து விழுந்து சிரிக்க, மேனனுக்கு  தாங்க முடியாத அவமானம். லேபை விட்டு வெளியேறினான். இரவில் ஆப் பாட்டி ல்  சரக்குடன் மேனன் பிரஸ் கிளப் வந்தான்.
சரக்கை உள்ளே தள்ளியபடி, “அந்த முட்டா... பய,  அறிவே இல்லடா! எல்லா பிள்ளைங்க முன்னாலேயும் அசிங்கப்படுத்திட்டான். நாளைக்கு எப்படி அந்த லேபுக்கு போவேன். நான் மதுரக்காரன். ஒரே போடு... ” என்று மேனன் புலம்ப, சக போட்டோகிராபர்களுடன் அவனை சமாதானம் செய்தேன்.  அந்தோணியை அசிங்கமாக மேனன் பேசுவதை காதுக் கொடுத்து கேட்க முடியாத ஒரு போட்டோ கிராபர், அந்தோணிக்கு போன் செய்து விபரம் கூறினார்.
அவ்வளவுதான்... மேனன் செல்போன் லைனுக்கு அந்தோணி வந்து அசிங்கமாக பேச... இரண்டு பேரும் தங்கள் குடும்பத்தையே ... ?  இதில் வேறு, ‘டேய் நான் மதுரக்காரன்டா... என்று மேனனும், டேய் நான் மெட்ராஸ்காரன்டா கீசீடுவேன் என்று அந்தோணியும் டயாலக் வேற பேசி ஊரை கேவலப்படுத்தினர்.
ஒரு கட்டத்தில், நீ... அதே இடத்தில் இரு... நேரில் வருகிறேன் என்று அந்தோணி போனை வைத்து விட்டு எங்கிருந்தோ புறப்பட்டான். இருவருக்கும் பிரச்னை வந்து விடக்கூடாது என்பதற்காக 1 மணி நேரம் நாங்கள் காத்திருந்தோம்.
அந்தோணி வரவே இல்லை. இனி அவன் வர மாட்டான் என்று நினைத்து மேனனை அவனது ரூமுக்கு அனுப்பி வைத்தோம். அவரவர் வீட்டுக்கு 12 மணிக்கு புறப்பட்டோம்.
மறுநாள் காலையில் அந்தோணியை ஒரு பிரஸ் மீட்டில் பார்த்தேன். முகம் எல்லாம் காயங்களுடன் நின்றான்.
‘எவ்வளவு சொல்லியும் 2 பேரும் கேட்கலைலா? என்று ஆவேசப்பட்டேன்.  விபரத்தை சொன்னான், வாயை பொத்தியபடி சிரித்துக் கொண்டே இடத்தை காலி செய்தேன்.
மாலையில் மற்றொரு பிரஸ் மீட்டில் மேனனை பார்த்தேன். அவனும் முகம் வீங்கி நின்றான்.
அவன் சொன்ன விபரத்தை கேட்டு, வயிறே வலித்து விட்டது.  பேச முடியாமல் சிரித்துக் கொண்டே எல்லா போட்டோகிராபர்களுக்கும் போன் செய்து விபரம் சொன்னேன். 
விஷயம் பரவி நண்பர்கள் மத்தியில் எல்லாம் சிரிப்புதான்.
நாங்கள் வீட்டுக்கு போன பின்னர், மேனனும், அந்தோணியும் ஒருவருக்கு ஒருவர் போன் செய்து அசிங்கமாக மீண்டும்  திட்டிக் கொண்டனர். ஒருவரை ஒருவர் அடிப்பதற்கு தேடி அலைந்துள்ளனர். மேனன் தங்கியிருக்கும் ரூமுக்கு செல்லும் பாதையை அந்தோணி மறந்து விட்டான்.
மேனனை எப்படியாவது அடித்து உதைக்க வேண்டும் என்ற கோபத்தில் சுற்றித் திரிந்து அந்தோணியால், ரூமை கண்டு பிடிக்க முடியவில்லை.  போன் செய்தால், ‘வாடா நீ வாடா ரூமில் தாண்டா இருக்கேன்...! என்று மேனன் சவுண்ட் விட்டானே தவிர, ரூமுக்கு வரும் பாதையை சொல்லவில்லை.
அந்தோணியால் டென்ஷனை அடக்க முடியவில்லை.  பையில் வைத்திருந்த குவாட்டரை தண்ணீர் கலக்காமல் அடித்தான்.  மீண்டும் டூவிலரில் சுற்றினான்.  பாதை தெரியாமல் அங்கும் இங்கும் சுற்றியவனான்.  ஏற்கனவே செம போதை, இதில் ராவாக குவாட்டரை ஊத்தியதால், போதை தலைக்கு ஏறியது.
‘ரோட்டில் இருந்த பள்ளத்தை கவனிக்காமல் வண்டியை விட்டான். பல்டி அடித்தான். உடலில் ரத்தம் வடிந்த நிலை எழுந்து நின்றான். கோபம் குறையவில்லை. அதிகரித்த நிலையில், மேனனுக்கு போன் செய்தான். செல்போன் சூட் ஆப் என்றது. செம கோபத்தில்,  விடியற்காலை 4 மணிக்கு ரத்த காயங்களுடன் வீட்டுக்கு போனான் அந்தோணி.
அதேநேரம் ரூமுக்கு வருவதாக வீரவசனம் பேசியவன் வரவில்லையே என்று அந்தோணியை தேடி மேனன் புறப்பட்டான். கட்டை கம்புடன் ரோட்டில் அழைந்துள்ளான். போதையில் தள்ளாடியபடி ரோட்டில் நடந்து சென்ற அவனை பார்த்த தெரு நாய்கள், ‘வந்துட்டான்டா வடிவேலு...!’ என்ற ரீதியில்  கூட்டணி அமைத்து விரட்டியது.
நாய் படையிடம் இருந்து தப்பிக்க, அலறியபடி அங்கும் இங்கும் ஓடினான் மேனன்.  அவனுக்கு என்பது போல் அமைக்கப்பட்டிருந்த குழிக்குள் காலை விட, பல பல்டி அடித்து எழுந்தான் ரத்தம் வடிந்தபடி.  கூடுதலாக செல்போன் பாதாளச் சாக்கடைக்குள் போனது, சூட்ஆப் ஆனது.
இப்படி ஒருவரை ஒருவர் பார்க்காமல், சண்டை போடாமல், விழுப்புண்கள் பெற்றனர் போட்டோ நண்பர்கள்.  இதை சொல்லி சொல்லி நாங்கள் சிரித்துக்கு கொண்டு மறுநாள் இரவு பிரஸ் கிளப்பில் அமர்ந்தோம். பக்கத்து டேபிளில், சிரித்து சிரித்து பேசியபடி, அந்தோணிக்கு மேனன் (சரக்கு) ஊத்திக் கொடுத்துக் கொண்டிருந்தான்.  விழுப்புண் பெற்றதற்காகவா?  வேலை கிடைத்தற்காகவா?  என்பது தெரியாது.

No comments:

Post a Comment