Saturday, February 11, 2012

இளைய தலைமுறையினரின் தமிழ் ... வேதனை தந்த சம்பவம்!



சனிக்கிழமை (11-2-2012) வீட்டில் பகலில் கொஞ்சம் ஓய்வு எடுத்தேன். மனதுக்கு சந்தோஷம் தரும் நகைச்சுவை  நிகழ்ச்சியை பார்க்க, ஆதித்யா டி.வி., சேனலை தேர்வு செய்தேன். அதில், ‘சொல்லுங்கண்ணே சொல்லுங்க...’ என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.

ரசிக்கும்படியான கேள்விகளை நிகழ்ச்சி தொகுப்பாளர், நகைசுவையுடன் பொதுமக்களிடம் கேட்டார். சந்தோஷமாகத்தான் நிகழ்ச்சியை பார்க்கத் தொடங்கினேன். ஆனால் நிகழ்ச்சி முடியும் போது, மனவேதனையுடன் சேனலை மாற்றினேன். 
குங்குமம் எப்படி தயாரிக்கிறார்கள்? இந்த கேள்விக்கு தமிழக மக்கள் சொன்ன பதில் கேட்டால் என்ன படித்தார்கள் இவர்கள் ? என்று தான் தோண்றும். அந்த அளவுக்கு மடத்தனமான பதில்கள். சரி,  சிரிக்க வைத்தார்கள், ஏற்றுக் கொள்ளலாம்.
குங்குமம், காய்ந்த மிளகாய் பொடியில், கொஞ்சம் கேசரி பொடியை கலந்து, தண்ணீர் ஊற்றி மொட்டை மாடியில் காயவைத்தால் கிடைக்கும். இது நேயரின் பதில். இன்னொருவர், ‘செங்கலை உடைத்து துõளாக்கி, கேசரி பொடியுடன் கலந்து தண்ணீர் ஊற்றி விரவி, காய வைக்கவேண்டும்.  மற்றொருவர், ‘குங்கும பொடி, மஞ்சள் பொடி என்றுகதை சொன்னார். மொத்ததில் யாருக்கும் தெரியவில்லை.

(குங்குமம், குரோகஸ் சாடிவஸ் என்ற மலரில் இருந்து தயாரிக்கப்படுகிறது. சமஸ்கிரத்தில், இந்த மலரை குஸ்ரன், ரக்டா, காஷ்மீர், ஷாதா என்றெல்லாம் அழைக்கின்றனர்)

அடுத்த கேள்வி பன்னீர் எப்படி தயாரிக்கப்படுகிறது? வாசனை திரவியத்தில்  (சென்ட்டில்) தண்ணீர் கலந்தால் பன்னீர் என்றார் ஒரு நடுத்தர வயது பாயம்மாள். அடுத்தவர், ரோஜா இதழ், பன்னீர்  கலந்தால் பன்னீர் வரும் என்றார் அறிவுப்பூர்வமாக...?

(பன்னீர், ரோசா மலர் இதழில் இருந்து எடுக்கின்றனர். ரோசா எண்ணெண்ணையை எடுக்கும்போது, பக்க விளைவு பொருளாக பன்னீர் கிடைக்கிறது. மேலை நாடுகளில் சமையலுக்கு பயன்படுத்துகின்றனர். நாம், திருமண வரவேற்புக்கு பயன்படுத்துகிறோம்)

இப்படி கேள்விகள் ஒவ்வொன்றாக சென்றுக் கொண்டிருக்க, சிலப்பதிகாரத்தை எழுதியவர் யார் ? என்று நிகழ்ச்சி தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார். மணிமேகலை என்றார் ஒருவர், மற்றொருவர் சீல்தலை சாத்தனார் என்றார். முன்றாமவர் கம்பர் என்றார். 10 பேரில் 2 பேர் மட்டுமே இளங்கோவடிகள் என்றனர்.
ஒரு பொழு போக்கிற்காக, மனதுக்கு சந்தோஷம் ஏற்பட நிகழ்ச்சியை பார்த்த எனக்கு வேதனைதான் ஏற்பட்டது. அதிலும், சிலப்பதிகாரத்தில் 5 கதாபாத்திரத்தின் பெயரை யாராலும் சொல்ல முடியவில்லை. கண்ணகி, கோவலன், மாதவி, கண்ணகி மகள், மாதவி மகள், கோவலன் மகள் என்றெல்லாம் சொல்லி முடித்தார்கள். சிலப்பதிகாரத்தில் அறிவுரை பல சொல்லும் கவுந்திர அடிகளை மறந்து விட்டனர்.  தவறாக தீர்ப்பளித்து விட்டேனே என்று மனம் வருந்தி, கண்ணகியிடம் மன்னிப்பு கேட்டப்படி மயங்கி விழுந்து இறந்தான் பாண்டியன்நெடுஞ்செழியன். இந்த நீதிமானை மறந்து விட்டனர். எந்த தப்பும் செய்யாத கோப்பெரும்தேவி, தன் கணவன் இறந்ததும், அவன் மார்பில் விழுந்து உயிர் துறந்தார். அவளையும் மறந்து விட்டனர். குப்பையில் அழகிய ரோஜா பூக்கும் என்பார்களே, அதுபோல மாதவிக்கு பிறந்த மணிமேகலை, துறவு பூண்டு, சிறைசாலைகளை எல்லாம் இழுத்து மூட வேண்டும் என்றார். இவரையும் மறந்து விட்டனர். என்ன கொடுமை சார்...?

10 பேரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதில் 3 பேர் தான் வயதானவர்கள். 7 பேர் இளம் பெண்கள், வாலிபர்கள். அதில் 2 பேர் கல்லுõரியில் படிப்பதாக வேறு சொன்னார்கள். அழியக்கூடிய மொழிகள் பட்டியலில் தமிழும் உள்ளது என்று யூனஸ்கோ அறிக்கை வெளியிட்டபோது, நம் தமிழ் அறிஞர்கள் பலர் அதுவெல்லாம் கிடையாது என்று மறுத்தனர்.
2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கற்புக்கு கதை சொன்ன ஒரே மொழி தமிழ்தான். அதன் முன்பு யாரும் இப்படி ஒரு சாமானியர்களை கதை மாந்தர்களாக கொண்டும், கற்பை பற்றியும் எழுத வில்லை. அப்படி தமிழுக்கு புகழ் தேடித்தரும் சிலப்பதிகாரத்தை எழுதியவர் யார் என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியாத அவல நிலையில் இளைய தலைமுறையினர் உள்ளனரே? எவ்வளவு பெரிய கேவலம்.
பெற்றோர்களே... ! உங்கள் பிள்ளைகளை வெளிநாட்டில் படிக்க வையுங்கள்.
ஆனால் தமிழையும் சேர்த்துச் சொல்லிக் கொடுங்கள்.  தமிழகம் முழுவதும் நடக்கும் இலக்கிய கூட்டங்களின் விபரங்களை ஞாயிறு தோறும் தினமணி பத்திரிகை வெளியிடுகிறது. அந்த இலக்கிய கூட்டத்துக்காவது உங்கள் வாரிசுகளை அனுப்பி வையுங்கள்.
உங்கள் காலைத் தொட்டு வேண்டுகிறேன், அன்பு சகோதரனாக...!