Saturday, March 17, 2012

சத்தியமூர்த்தி பவன், இளங்கோவன், பிரியாணி...!


டக்ளஸ் காமெடிகள்:





தமிழகத்தில் உள்ள தமிழ் பத்திரிகையாளர்கள் பலரை உருவாக்கிய நாளிதழ் என்ற பெருமை அந்த நிலத்தின் பெயரை கொண்ட குறைவாக விற்பனையாகும் நாளிதழுக்கு எப்போதும் உண்டு. அந்த நாளிதழில் வேலை செய்த அறிவையும், நிலவையும் பெயராக  கொண்ட அந்த நிருபரின் நடவடிக்கை இப்போது நினைத்தாலும், வயிறு வலிக்கும். அந்த அளவுக்கு விவரம் கெட்ட நிருபர் அவர்.
இந்த பதிவில், அந்த அறிவையும், நிலவையும் பெயராக கொண்ட அந்த பத்திரிகையாளர்தான் டக்ளஸ்.  இந்த டக்ளஸ், வெகுளியானவர். தற்பெருமைக்காரர். யாராவது புகழ்ந்து பேசினால் போதும், கர்ணனாக மாறிடுவார்.
அப்போது குறைவாக விற்பனையாகும் ஒரு வாரப்பத்திரிகையில் நிருபராக வேலை செய்தேன். மாதக்கடைசி. கையில் பணம் இல்லை. ஒரு நிருபரை பார்த்தேன். விவரம் சொன்னேன்.
சாப்பிட்டியா...? என்றான்.
இல்லை... என்றேன்.
என் கையிலும் பணம் இல்லை. ஆனால் நீ பிரியாணி சாப்பிட போற. பணமும் கிடைக்க போது என்றான் அந்த நண்பர். எனக்கு பயம். ஏதோ வம்பில் சிக்க வைத்து விடுவானோ என்று. பின்னர் சில விபரங்களை சொன்னான். சிரித்துக் கொண்டே தலையாட்டி விட்டு விடைப் பெற்றேன்.  நேராக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு போனேன். அங்கு டக்ளஸ் உட்கார்ந்திருந்தார். அவர் எனக்கு வயதில் மூத்தவர்.  
“என்ன அண்ணே...! ஈ.வி.கே.எஸ். இளங்கோவனிடம் பேட்டிக் கேட்டேன். உங்களிடம் பெர்மிஷன் வாங்கச் சொல்லுறாரு...?”  என்று ஐடியா சொன்ன நிருபர் சொல்லிக் கொடுத்த டயலாக்கை  பேசினேன்.  “தெரியாம போச்சுண்ணே, தெரிஞ்சுருந்தா உங்க கிட்டேயே அப்பாயின்மென்ட் வாங்கியிருப்பேண்ணே?”  என்றேன்.
நடிகர் திலகம் சிவாஜியின் குரலில், “என்ன தம்பி சொல்ற...! அவர் என்ன சொன்னாரு...?’ முகத்தில் பல கோடி பெருமையால் வரும் சிரிப்புடன்  டக்ளஸ் கேட்டார்.
“இல்லண்ணே, ஒரு பேட்டி போடலாம்னு நினைச்சு, அவருக்கு  போன் போட்டேன். அதுக்கு அவர் டக்ளசிடம் அனுமதி வாங்குன்னு சொல்லிட்டாருண்ணே...!” என்றேன்.
“அப்படியா சொன்னாரு...! சரி அவருகிட்ட பேசிட்டு அப்பாயின்மென்ட் வாங்கித் தாரேன். சாப்பிட்டியா... தம்பி” என்று மீண்டும் சிவாஜி குரலில் கேட்டார்.
“இல்லண்ணே...” என்றேன்.
“சரி வா...”  என்று என்னை ஓட்டலுக்கு அழைக்கும்போதே, அங்கிருந்த 2 நிருபர்களையும் அழைத்தார். பெருமை பேச.  4 பேரும் ஓட்டலுக்கு சென்றோம். “இளங்கோவன்கிட்ட பேட்டி வேணும்னு தம்பி கேட்டானா? அவரு என்கிட்ட பெர்மிஷன் வாங்கச் சொல்லிட்டாராம். என் மதிப்பை பார்த்தீங்களா...?  இருக்காதா பின்னே...? எத்தனை வருஷமா காங்கிரஸ் ஏரியா பார்க்கிறேன். நிருபருக்கு மதிப்பு கொடுக்கிறதுன்னா  இளங்கோவன்தான். அவரை விட்டா வேறு ஆளே இல்லை. நம்மள கண்டாலே  அத்தனை காங்கிரஸ்காரங்களும்  நடுங்குராங்கல்ல... அந்த அளவுக்கு அவங்கள வைச்சிருக்கேன்...!. இப்பத்தான் என் மதிப்பு தம்பிக்கு தெரிசுருக்கு. சரி ஒரு பேட்டிய வாங்கி போடட்டும். நம்மாள முடிஞ்ச உதவி, அவ்வளவுதான்” என்று தற்பெருமை பேசிக்கிட்டு இருந்தாரு டக்ளஸ்.
ஆனா காலையில் இருந்தே சாப்பிடாத நான், காடை, கவுதாரின்னு சைடீஸ்சுகளுடன் கோழி பிரியாணியை வயித்துக்குள் தள்ளிக் கொண்டு இருந்தேன். உடன் வந்த 2 நிருபர்களுக்கும், விவரம் எல்லாம் தெரியும். டக்ளஸ் பேசுவை கேட்டு, ஆமாண்ணே... நீங்க யாரு... எவ்வளவு பெரிய நிருபரு...? என்று ஜால்ரா போட்டப்படி சாப்பிட்டனர். பில் 400 ரூபாயை தாண்டி இருந்தது.
நடக்க முடியாமல் ஓட்டலை விட்டுவெளியில் வந்தேன்.
தம்பி... சிகரெட்...! என்று மீண்டும் சிவாஜி குரலில் டக்ளஸ்.
“ஆமாண்ணே...” என்றேன்.
ஒரு சிகரெட் இல்ல. 2 பாக்கெட் சிகரெட் வாங்கி கொடுத்தார். பேண்ட் பாக்கெட்டுக்குள் திணித்துக் கொண்டேன். மீண்டும் சத்திய மூர்த்தி பவன் வந்தோம். “தம்பி... நீயே கஷ்டப்படுவ... இந்தா  வைச்சுக்கோடா...”  என்று சிவாஜி டயலாக்கில், என் சட்டை பையில் 200 ரூபாய் திணித்தார்.
“சரி, நாளைக்கு இளங்கோவனிடம்  பேசி அப்பாயிண்மென்ட் வாங்கித் தாரேன்னு” டக்ளஸ் சொல்லி முடிக்க, நான் இடத்தை காலி செய்தேன். மூத்த பத்திரிகையாளர், அவரை இப்படி ஏமாற்றி விட்டோமே என்று மனதில் சிறு வலி இருந்தாலும், நடந்த விஷயத்தை நினைத்து நினைத்து சிரித்துக் கொண்டே நடையை கட்டினேன்.
மறுநாள், மதியம் சரியாக 2 மணிக்கு டக்ளஸ் எனக்கு போன் செய்தார். “தம்பி  எங்கப்பா இருக்கிற...? இளங்கோவன் சார் சத்திய மூர்த்தி பவனில் உனக்காக காத்திருக்காரு. அவர் கிட்ட விவரம் கேட்டேன். அப்படி யாரும் பேசலையேன்னு சொல்லுறாரு. இருந்தாலும் பரவாயில்லை, உனக்கு பேட்டிக் கொடுக்க காத்திருக்காரு. உடனே வா...! என்றார் டக்ளஸ்.
எனக்கு வயிறே கலங்கி விட்டது. அலுவலகத்தில் பேட்டி விபரத்தைப் பற்றி பேசவே இல்லை. இவர் வேறு, இளங்கோவனை  உட்கார வைத்துக் கொண்டு கூப்பிடுகிறார். விளையாட்டா பேசினது வினையா போயிருமோ... என்ன செய்வது ?” என்று ஒரே யோசனை.
உடனே டக்ளசுக்கு போன் செய்தேன். “அண்ணே, இந்த வார ஸ்யூவுக்கு  பக்கம் எல்லாம் முடிஞ்சிடுச்சி. அடுத்த வாரம்தாண்ணே பேட்டி வேணும்” என்றேன்.
“அப்படியாப்பா... இப்ப நீ வரல... சரிப்பா... இளங்கோவன் நீ வருவன்னு சாப்பிடாம உட்கார்ந்திருந்தாரு. சரி அவரை போகச் சொல்லிடுறேன். நீ அடுத்த வாரம் ஞாபகப்படுத்து. அண்ண உனக்கு இளங்கோவன்கிட்ட பேட்டி வாங்கித் தாரேன். ஓ.கே.வா...’ என்றார் சிவாஜி டயலாக்கில்  டக்ளஸ்.
எனக்கு ஓண்ணும் ஓடல. மதியம் 2 ஆகி விட்டது. நாம் ஏதோ ஒரு தாமாசுக்காக செய்த சேட்டை, இப்படி மாறி விட்டதேன்னு ? வருத்தப்பட்டேன். 11 வருஷம் கடந்து ஓடினாலும், சத்திய மூர்த்தி பவனை கடக்கும்போது, டக்ளஸ், பிரியாணி, இளங்கோவன், பேட்டி இவையெல்லாம் எண்ணத்தில் புகுந்து தனியாக சிரித்துக் கொண்டே போவேன்.  ரோட்டில் போகிறவர்கள் என்னை ஒரு மாதிரியாக பார்த்துச் செல்வார்கள். ஆனால் அவர்களுக்கு விபரம் தெரியாதே....?

No comments:

Post a Comment