Thursday, December 3, 2015

சென்னை ஐகோர்ட்டின் மூத்த நீதிபதியாக இருப்பவர் சத்தீஷ்குமார் அக்னிகோத்ரி. இவர், தமிழ்நாடு மாநில சட்டப்பணி ஆணைக்குழுவின் செயல் தலைவராக உள்ளார்.  இவர், அனைத்து மாவட்ட முதன்மை நீதிபதிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
கன மழையின் காரணமாக வெள்ளம் புகுந்து வீடுகளை இழந்து நிற்கும் பொதுமக்களுக்கு, மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழு மூலம் மாவட்ட நீதிபதிகள் அடிப்படை உதவிகளை செய்துக் கொடுக்கவேண்டும். மாவட்ட அளவில் உள்ள சட்டப்பணி ஆணைக்குழு மற்றும் மாற்றுமுறை சமரச தீர்வு மையம் கட்டிடங்களில் வீடு இழந்தை பொதுமக்களை தங்க வைத்து உணவு உள்ளிட்ட அடிப்படை உதவிகளை செய்துக் கொடுக்கவேண்டும். இதற்காக சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களுடன், ஒருங்கிணைந்து மாவட்ட முதன்மை நீதிபதிகள் செயல்படவேண்டும்.
இவ்வாறு நீதிபதி சத்தீஷ்குமார் அக்னிகோத்ரி கூறியுள்ளார்.
................

Friday, July 24, 2015

முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் விடுதலை

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து 
முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் விடுதலை 
சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு 


சென்னை, ஜூலை 24-
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சராக 17.6.1991 முதல் 13.5.1996 வரை பதவி வகித்தவர் எஸ். கண்ணப்பன் என்ற ராஜகண்ணப்பன். இவர், அமைச்சராக இருந்த இந்த காலக்கட்டத்தில், வருமானத்துக்கு அதிகமாக ரூ. 11 கோடியே 10 லட்சத்து 41 ஆயிரத்து 252 மதிப்புள்ள கட்டடங்கள், நிலங்கள், வாகனங்கள் உள்ளிட்ட ஏராளமான சொத்துக்களை தன் பெயரிலும் தன் மனைவி, தாயார் மற்றும் உறவினர் பெயரிலும் வாங்கியதாக 1996-ம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் கண்ணப்பனின் மனைவி நளாயினி, தாயார் ராஜலட்சுமி, தம்பி செந்தாமரை, மற்றொரு தம்பி திருவழகு, உறவினர்கள் செல்லம்மாள், கண்ணகி, கலைராஜன், கண்ணாத்தாள், தவமணி, ஜெயபாரதி, தேவகியம்மாள், பாலசுப்பிரமணியன், கணபதி, சுலோனா, கலைமதி, லட்சுமணன், மாணிக்கம், பெருமாள், சரஸ்வதி ஆகிய 20 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். 
குற்றச்சாட்டு பதிவு
இந்த வழக்கு சென்னையிலுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது.  இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை 2005-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தாக்கல் செய்தனர். இந்த குற்றப்பத்திரிகை நகல் 2007-ம் ஆண்டு கண்ணப்பன் உட்பட 20 பேருக்கும் வழங்கப்பட்டது. இந்த வழக்கில், குற்றம் சுமத்தப்பட்ட நளாயினி, ராஜலட்சுமி ஆகியோர் இறந்து விட்டனர். இதையடுத்து இவர்கள் 2 பேர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டது. மீதமுள்ள 18 பேர் மீதான வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கோபால், போலீசார் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை. எனவே, கண்ணப்பன் உட்பட அனைவரையும் விடுதலை செய்கிறேன்’ என்று நேற்று தீர்ப்பளித்தார். 
........................